மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைசீனாவில்யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. இந்த அணைத் திட்டத்தால் மின் உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாக கருதுகிறது. மேலும்..
சென்னையில் வாழும் உலோ.செந்தமிழ்க்கோதை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின்பொறியாளர். பல களஞ்சியப் பணிகளிலும் கலைச்சொல் தொகுப்புகளிலும் பங்களித்தவர். 1960களில் இருந்தே அறிவியல் தமிழ்வளர்ச்சியில் ஈடுபட்டு வருபவர். தமிழ்நாடு மின்வாரியத் தொழில்நுட்ப அகராதியை உருவாக்கியவர். 2014 திசம்பர் முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். தமிழ் விக்சனரியில் 600க்கும் மேற்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறையுடன் இட்டுள்ளார். வானியல், மெய்யியல் தொடர்பான 160 அளவுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அறிவியலின் மெய்யியல், பியேர் அபேலார்டு, தியானோ, தொல்மரபியல், கார்னியாடெசு,அர்செசிலௌசு, கரோலின் எர்ழ்செல், நாம் ஆற்றுப் போர் முதலியன இவர் பங்களித்த கட்டுரைகளுள் சில.
பனிக்கரடி (துருவக் கரடி) புவியின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்ல கொன்றுண்ணிப் பாலூட்டி. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20,000 பனிக்கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டு அழிந்துவரும் இனங்களுள் இவை சேர்க்கப்பட்டுள்ளன. காணொளியில் இரு பனிக்கரடிகள் விளையாட்டுக்காக சண்டையிடுவது காட்டப்பட்டுள்ளது.